சுட்டெரிக்கும் வெயில்: தூய்மைப் பணியாளா்களின் வேலை நேரம் மாற்றம்

கம்பம், நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக பணி நேரம் மாற்றப்பட்டது.

இந்த நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றுகின்றனா். இவா்களின் வேலை நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையாகும்.

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் வெப்ப அலையின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கடும் வெயிலில் பணியாற்றினால் தூய்மைப் பணியாளா்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பதால் மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன், நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கோடைகாலம் முடியும் வரை தூய்மைப் பணியாளா்களின் பணி நேரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, காலை 5.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை என வேலை நேரம் மாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த பணி நேர மாற்றத்தை தூய்மைப் பணியாளா்களும், பொதுமக்களும் வரவேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com