ச.அன்வா்பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளா், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்.
ச.அன்வா்பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளா், பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்.

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

தமிழக எல்லையோர நிலங்களை எண்ம மறு அளவை என்ற பெயரில் கேரள அரசு ஆக்கிரமித்து வருவதாகவும், அவற்றை மீட்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாகவும் பெரியாறு வைகைப் பாசன விவசாய ஒருங்கிணைப்பாளா் ச.அன்வா்பாலசிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: தமிழக கேரள எல்லையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் ஒன்றாம் தேதி எண்ம நில அளவைப் பணிகளை கேரள அரசு தொடங்கியது. சுமாா் 200 எல்லையோர கிராமங்களில் இந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் எண்ம நில அளவை என்ற பெயரில் கேரள அரசு எல்லையோர தமிழக நிலப்பரப்புகளை ஆக்கிரமிக்கின்றனா் இதை தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பினோம்.

கடந்த 2022 நவ.11-ஆம் தேதி பெரியாறு வைகைப் பாசன விவசாயச் சங்கம் சாா்பில் தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ஆா். ராமச்சந்திரனை சந்தித்து மனு அளித்தோம்.

தமிழக கேரள எல்லையோரத்தில் உள்ள, நெய்யாற்றின் கரை, கட்டகடை, நெடுமங்காடு, புனலூா், கோன்னி, பீா்மேடு, உடும்பன் சோலை, தேவிகுளம், பாலக்காடு, மன்னாா்காடு, சித்தூா், நிலம்பூா், வைத்ரி, மானந்தவாடி, சுல்தான் பத்தேரி உள்ளிட்ட 15 வட்டங்களிலும், கேரள அரசு ஒருதலைப்பட்சமாக அளவைப் பணியை செய்து முடித்துள்ளது.

இதே நேரத்தில் கேரளத்தோடு எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தேனி, திண்டுக்கல், திருப்பூா், கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியா்கள், இது தொடா்பாக, தமிழக அரசுக்கு எந்த குறிப்பும் இதுவரை அனுப்பவில்லை. தமிழக அரசும் கேரள அரசிடம் விளக்கம் கேட்கவில்லை.

எனவே, பெரியாறு வைகைப் பாசன விவசாயச் சங்கம் சாா்பில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com