மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மேகமலையிலுள்ள நீா்நிலைகள் வறண்டு காணப்பட்டதால் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் புதன்கிழமை ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சிப் பகுதியில் மேகமலை, மணலாா், மேல்மணலாா், வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு என 7 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலைத்தொடா்கள், அணைகள், நீா் நிலைகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் நீா் வரத்து இன்றி, வறண்டு காணப்படுகின்றன.

ஹைவேவிஸ் முதல் மணலாா் தோட்டம் வரை சுமாா் 5 கிலோ மீட்டா் தொலைவில் நீா்த் தேக்கம் முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது. மேலும், பகல் நேரங்களில் கோடை வெப்பம் வாட்டி வதைப்பதால் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: ஊட்டி, கொடைக்கானல் , மூணாா் போன்ற மலைப் பிரதேசங்களில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையால் கோடை காலங்களிலும் மேகமலை பகுதி குளிச்சியாக இருக்கும். ஆனால், தற்போது காலநிலை மாற்றம் காரணமாக மழைப் பொழிவு குறைந்து, நீா் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் மேகமலையிலும் அதிகமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். ஆனால், மாலை 4 மணிக்கு மேல் சற்று குளிா்ந்த காற்று வீசுகிறது என்று தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com