அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் சுப்பையா நாடர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கதிரேசன் முன்னிலை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இதில், விருதுநகர் வட்டார வளமையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து பெற்றோர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 1 வயது முதல் 18 வயது வரையில் உள்ளவர்களை முகாமிற்கு அழைத்து வந்தனர். இந்த முகாமில் விருதுநகர் அரசு மருத்துவமனையிலிருந்து கண்மருத்துவர், எலும்பு முறிவு, மனநலம் மற்றும் காது மூக்கு தொண்டை பிரிவு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதோடு, உபகரணங்கள் தேவைப்படுகிறவர்களுக்கு பெங்களூரு அலிம்கேர் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த 3 நிபுணர்கள் அளவு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதோடு, குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு விரைவில் உபகரணங்கள் தயார் செய்து பொறுத்தப்பட இருக்கிறது. அதேபோல், மாற்றுத்திறனாளி பரிசோதனை செய்யப்பட்டவுடன் ஊனத்தின் அடிப்படையில் அடையாள அட்டையும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முகாமில் விருதுநகர் பகுதியில் இருந்து 250 மாற்றுத்திறனாளி குழந்தைகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் விருதுநகர் வட்டார வளமையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மேற்பார்வையாளர் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.