விருதுநகரில் வாகை சூடப்போவது யார்? தொகுதி அலசல்

"கிங் மேக்கர்' என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் கடந்த 1967ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப் பிறகு புதிய பேரவைத் தொகுதியாக உருவானது. அதற்கு முன்பு வரை சாத்தூர் தொகுதியுடன் இணைந்திருந்தது.
Updated on
2 min read

"கிங் மேக்கர்' என்று அழைக்கப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகர் கடந்த 1967ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப் பிறகு புதிய பேரவைத் தொகுதியாக உருவானது. அதற்கு முன்பு வரை சாத்தூர் தொகுதியுடன் இணைந்திருந்தது.

1967 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தலில் திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும்,காங்கிரஸ் 2 முறையும், ஜனதா, தமாகா,மதிமுக, அதிமுக கூட்டணியில் தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் அதிமுக சார்பில் கி.கலாநிதி, திமுக சார்பில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், தேமுதிக சார்பில் செய்யது காஜா ஷெரீப், பாஜக சார்பில் செ.காமாட்சி, பாமக சார்பில் கணேச பெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விளை பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யக் கூடிய சந்தைக்கு பெயர் பெற்றது விருதுநகர். இத்தொகுதியை அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் 1980க்குப் பிறகு தற்போது நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன.

அதிமுகவின் பலம், பலவீனம்: விருதுநகர் ஒன்றிய பெருந்தலைவராக உள்ள கலாநிதி வாக்கு வங்கி அதிகமுள்ள கிராமப் பகுதி மட்டுமல்லாது நகர் பகுதியிலும் அறிமுகமானவர் என்பதும் கட்சியின் சின்னமும் இவரது பலம். இதே தொகுதியில் சீட் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள் எதிராக செயல்படுவது பலவீனம்.

திமுகவின் பலம், பலவீனம் : கடந்த 1996இல் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார். ஒன்றிய பெருந்தலைவராகவும் பதவி வகித்தவர் என்பதால் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். மேலும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இவரது பலம். அதேநேரம் விருதுநகர் ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக வாக்குறுதி எதுவும் தராமல் இருப்பது மிகப் பெரிய பலவீனம்.

தேமுதிகவின் பலம், பலவீனம்: கடந்த 2011இல் தேமுதிக வெற்றி பெற்ற தொகுதி என்பதால், அக்கட்சியின் சின்னம் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமாகியுள்ளது தேமுதிக வேட்பாளர் செய்யது காஜா ஷெரீப்பின் பலம். ஆனால், கூட்டணி கட்சியை ஒருங்கிணைக்காமல் தன்னிச்சையாக தேர்தல் பணி செய்வது இவரது பலவீனமாகும்.

பாஜகவின் பலம், பலவீனம்: பாஜக சார்பில் போட்டியிடும் செ.காமாட்சி, வியாபாரிகள் சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ளார். இவர் சார்ந்த சமூக மக்கள் விருதுநகரில் அதிக அளவில் வசித்து வருவது இவரது பலம். ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டுமே தலையைக் காட்டுவது இவரது பலவீனமாகும்.

பாமகவின் பலம், பலவீனம்: பாமகவுக்கு இத் தொகுதியில் பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லையென்றாலும் வேட்பாளர் கணேச பெருமாள் தனது சமூக மக்களை நம்பியே களத்தில் இறங்கியுள்ளார்.

ஆகவே, 36 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணியினருக்கு தொகுதியை ஒதுக்காமல் நேரடியாக களத்தில் மோதும் அதிமுக-திமுக இரு கட்சியினரிடையே தான் போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியிருந்தாலும் வாகை சூடப்போவது யார் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-வெ. முத்துராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com