மின் இணைப்பு கிடைக்காமல் தவிக்கும் விவசாயிகள்

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளாக விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 6 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை...
Updated on
2 min read

தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளாக விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த 6 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
 தமிழகத்தில் நிகழாண்டு 145 லட்சம் மெட்ரிக் டன் நெல், தானியம், பயறு வகைகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு இடுபொருள்கள் வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.
 குறிப்பாக, நெல், தானியம், பயறு ஆகியவற்றின் விளைச்சலை அதிகரிக்க நேர்த்தி செய்யப்பட்ட விதைகள், உயிரி உரங்கள், நுண்ணுயிர் உரங்கள், உழவுக் கருவிகள் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், மா, தென்னை, கொய்யா, சப்போட்டா, பருத்தி போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
 கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் சராசரி மழையளவு குறைவாகவே உள்ளது. இதனால், நீர் நிலைகளான கண்மாய், குளம் போன்றவற்றில் தண்ணீர் தேங்குவது அரிதான ஒன்றாகவே உள்ளது. அதன் காரணமாக, சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தி வந்த கிணற்றுப் பாசனத்தில் தண்ணீர் வற்றியதால், ஆயிரக்கணக்கான கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன.
 வேளாண் பொறியியல் பிரிவு சார்பில் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்தது. ஆனால், மின் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கிணறு வறண்டது, ஆழ்துளைக் கிணறு இல்லாதது போன்ற பல காரணங்களால் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டன.  
 இதன் காரணமாக, விவசாயிகள் பலர் கேரளம், சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் கட்டுமானப் பணிகளுக்குச் சென்றுவிட்டனர்.  குறிப்பாக, பல கிராமங்களைச் சேர்ந்தோர் பிழைப்புக்காக பிற நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில், 6 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து 16 ஆண்டுகள் கடந்தும், இதுவரை யாருக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
 எனவே, பதிவு மூப்பு அடிப்படையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கினால் மட்டுமே தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாறும். வேளாண் பொருள்கள் உற்பத்தியும் அதிகரிப்பதுடன், குறிப்பிட்ட அளவு இலக்கையாவது அடைய முடியும்.
 இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் விஜயமுருகன் கூறியதாவது:
 விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு எனக் கூறுகின்றனர். விவசாயத்துக்கு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்குகின்றனர். ஏற்கெனவே ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விவசாயம் செய்வதற்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்ய முடியும்.
 கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் சிலர் ரூ. 10 ஆயிரம், ரூ. 25 ஆயிரம், ரூ. 50 ஆயிரம் என முன்பணமும் செலுத்தியுள்ளனர். ஆனால், எந்த விவசாயிக்கும் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான விவசாயிகள் பிழைப்பு தேடி பல்வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்டனர்.
 விவசாயிகள் நலன் கருதி, பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 "மின்சார வாரியத்தில் மின் இணைப்பு கோரி முன்பணம் செலுத்திய விவசாயிகள் சிலருக்கு மட்டும் பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்க இதுவரை உத்தரவு வரவில்லை' என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com