குற்றால சீசன் தொடங்க ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள குற்றாலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கேரளத்தில் தென் மேற்கு பருவமழை, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இதனால், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலிலும் தண்ணீர் கொட்டும். இங்கு மூலிகை கலந்த அருவித் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
குற்றால சீசன் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை இருக்கும். மதுரையில் இருந்து திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் வழியாக செங்கோட்டை செல்லும் பேருந்தில் பயணம் செய்தால் சுமார் 5 மணி நேரத்தில் குற்றாலம் செல்லாம்.
அதேநேரத்தில் மதுரையில் இருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வரை தினந்தோறும் இரு மார்க்கங்களில் 3 முறை மட்டுமே பயணிகள் ரயிலும், பொதிகை எக்ஸ்பிரஸ் ஒருமுறையும் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் ரயில்களில் அதிகபட்சமாக மதுரையில் இருந்து தென்காசி வரை செல்ல 3.30 மணி நேரம் மட்டுமே ஆகிறது. மேலும் பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு என்பதால், குற்றாலம் செல்ல ரயில் பயணத்தையே மக்கள் அதிகம் நாடுகின்றனர்.
சாதாரண நாட்களிலே செங்கோட்டை செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் நிரம்பி வழியும். குற்றால சீசனை தொடங்கிவிட்டால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை சென்னையில் இருந்த வாரத்தின் இரு நாட்கள், மேலும் மானாமதுரை வந்த ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்தனர். ஆனால், இந்த இரண்டு ரயில்களும் எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் குற்றாலத்துக்கு செல்ல வசதியாக செங்கோட்டை வரை செல்ல சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வரை டெமோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயிலை இரவு நேரத்தில் செங்கோட்டை வரை இயக்கினால் பயணிகள் பயன் பெறுவர். மேலும், ஏற்கெனவே இயங்கி வந்த கோவை - செங்கோட்டை பயணிகளை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். மானாமதுரை வரை வந்து செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலையும் மீண்டும் செங்கோட்டை வரை இயக்க வேண்டும்.
குற்றால சீசன் நிறைவடையும் வரையாவது, மதுரை - செங்கோட்டை பயணிகளை ரயிலை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.