விருதுநகரில் சொத்துவரி, குடிநீர் வரி என ரூ.24 லட்சம் செலுத்தாத திருமண மண்டபத்துக்கு வியாழக்கிழமை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
விருதுநகர் நகராட்சி ஆணையராக பார்த்தசாரதி கடந்த 2 மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து அவர், நகராட்சி பகுதியில் அனைத்து வரிகளையும் வசூலிக்க தலா 5 பேர் கொண்ட ஒன்பது குழுக்களை நியமித்தார்.
இந்த ஒவ்வொரு குழுவினரும், தினமும் ரூ. 5 லட்சம் வரை கட்டாயம் வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்தார். இதையடுத்து, ரூ. 3 கோடி வரை வரி வசூலிக்கப்பட்டது.
மேலும், நோட்டீஸ் வழங்கியும் வரி செலுத்தாத சுமார் 50 வீடுகள், வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பை துண்டித்தார்.
இதனால், வரி பாக்கி வைத்திருப்போர் நகராட்சி அலுவலகம் வந்து பாக்கித் தொகையை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சத்தியமூர்த்தி சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு பல ஆண்டுகளாக ரூ. 24 லட்சம் வரி செலுத்தாமல் இருந்து வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்டோருக்கு நகராட்சி சார்பில் 3 முறை எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனாலும், அவர்கள் வரி செலுத்தாமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் அந்த திருமண மண்டபத்துக்குச் சென்று வியாழக்கிழமை சீல் வைத்தனர்.
அதேபோல், சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன.
அதற்கான இடங்களை ஆய்வு செய்து வரி எவ்வளவு என்பதை சம்பந்தப்பட்டோருக்கு தெரிவிக்காமல் நகராட்சி அலுவலர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறையாக ஆய்வு செய்து வரி விதிப்பு செய்தாலே, பல கோடி ரூபாய் வசூலாகும்.
இதன் மூலம் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் மட்டுமன்றி, அத்தியாவசிய தேவையான குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தல், தெரு விளக்கு பராமரித்தல் போன்ற பணிகளுக்கு பொது நிதியை பயன்படுத்தலாம்.
எனவே இதுறித்து நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.