"திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்'
By DIN | Published On : 01st April 2019 06:07 AM | Last Updated : 01st April 2019 06:07 AM | அ+அ அ- |

தேர்தலில் அமமுக வெற்றி பெற்றால் சிவகாசி மற்றும் திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மக்களவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் கூறினார்.
சிவகாசியில் சனிக்கிழமை மாலை விருதுநகர் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு அக்கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கம்ராஜா தலைமை வகித்தார். இதில் வேட்பாளர் பரமசிவ அய்யப்பன் பேசியது: நான் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். நான் வெற்றி பெற்றால், தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைக்கப் பாடுபடுவேன். பட்டாசுத் தொழிலில் உள்ள பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுப்பேன். விருதுநகர் தொகுதியில் உள்ள வேலை இல்லாத பொறியியல் பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் இத்தொகுதியில் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பேன். இந்த மாவட்டத்தில் பல் மருத்துவக் கல்லூரி அமைய நடவடிக்கை எடுப்பேன். இத் தொகுதியின் பிரதான பிரச்னையான தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கப் பாடுபடுவேன். சிவகாசி சாட்சியாபுரத்திலும், திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இன்பத்தமிழன், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், தினகரன் பேரவை மாநிலச் செயலாளர் சாந்தி ஆனந்த், சிவகாசி நகரச் செயலாளர் பிச்சைகனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்