ராஜபாளையத்தில் கல்வி நிறுவனத் தலைவர் பிறந்தநாள்
By DIN | Published On : 01st April 2019 05:57 AM | Last Updated : 01st April 2019 05:57 AM | அ+அ அ- |

ராஜபாளையம், அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்மாள் நினைவு தொடக்கப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் ஆகிய கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமச்சந்திர ராஜாவின் 95 ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், நிறுவனர் ராமச்சந்திர ராஜா உருவப்படத்துக்கு நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் உமா சந்திரசேகர் குழுவினரின் கீர்த்தனாஞ்சலி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சுவாமி சன்னிதானந்தா ஆசியுரை வழங்கிப் பேசியது:
"ஆன்மிகம் என்பதை அறிவியல் கண் கொண்டு காணுதல் கூடாது. காரணம் பக்தி, பாவம், புண்ணியம் போன்ற ஆன்மிகக் கருத்துகள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை. உயிருக்கு ஊதியமாகிய ஆன்மிகத்தை வயதானபின் பின்பற்ற வேண்டும் என்றில்லாமல் விவரம் தெரிந்த நாளிலிருந்தே மேற்கொண்டு வாழ வேண்டும் என்றார். முன்னதாக நிகழ்ச்சியில் ராமச்சந்திர ராஜா குருகுலத் தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்தி ராஜா வரவேற்றுப் பேசினார்.
பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். விழாவில், அறக்கட்டளை உறுப்பினர்கள், நிறுவனரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.