விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரில் வாகனச் சோதனையில் ரூ.3.83 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 01st April 2019 05:56 AM | Last Updated : 01st April 2019 05:58 AM | அ+அ அ- |

விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வாகனச் சோதனையில் வியாபாரிகளிடமிருந்து ரூ. 3.83 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சாத்தூர் ரயில்வே கடவுப்பாதை அருகே தேர்தல் பறக்கும் படையினர் துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனர்.
அதில், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாவு வியாபாரி சுந்தரமூர்த்தி என்பவர் உரிய ஆவணமின்றி ரூ. 89ஆயிரத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரெங்கநாதனிடம் ஒப்படைத்தனர்.
இதே போல் அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்திச் சோதனை நடத்தினர். இதில் ஆட்டு வியாபாரிகளான சிறுகுளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையப்பன், குண்டலகுத்தூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள்சாமி ஆகிய இருவரும் உரிய ஆவணமின்றி ரூ. 1.60 லட்சத்தைக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ரெங்கநாதனிடம் ஒப்படைத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி விலக்கில் தேர்தல் நிலைக் குழுவினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுருநாதன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த அ.கணேசன் (24) என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.68,170 வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அலுவலர்கள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அறிவழகனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கணேசன், ராஜபாளையம், சங்கரன்கோவில் முக்கு ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் பணி செய்து வருகிறார் என்றும், வசூல் செய்த பணத்துடன் வந்ததாகவும் தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது.
விருதுநகர்: அருப்புக்கோட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் செல்வராஜன் மகன் சிவக்குமார் (26). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை செங்குன்றாபுரம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். சீனியாபுரம் அருகே சென்ற போது அப்பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதில், சிவக்குமார் காரை சோதனையிட்ட போது ஆவணங்களின்றி ரூ. 65,860 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, விருதுநகர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், சத்திரரெட்டியபட்டி நான்கு வழிச் சாலையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் அலுவலர் ரமேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற லாரியை நிறுத்திச் சோதனையிட்டனர். அதில், ரூ. 43 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர் அடங்கிய நான்கு பெட்டிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதை, சத்திர ரெட்டியபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.