சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா தேரோட்டம்
By DIN | Published On : 11th April 2019 07:15 AM | Last Updated : 11th April 2019 07:15 AM | அ+அ அ- |

சிவகாசி மாரியம்மன்கோயில் பங்குனிப்பொங்கல் விழாவினையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் மார்ச் 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனிப்பொங்கல் விழா தொடங்கியது.
அன்று இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தினசரி இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற 7ஆம் திருவிழாவின் போது, அன்று மாலையில் சீர்வரிசைகள் பின் தொடர புஷ்பப் பல்லக்கில் அம்பாள் வீதி உலா வந்தார். அன்று இரவு யானை வாகனத்தில் அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற்ற 8ஆம் திருவிழா பொங்கல் விழாவாக நடை பெற்றது. அன்று காலையில் கோயிலின் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டனர். தொடந்து அன்று மாலை அம்பாள் குதிரை வாகனத்தில் முப்பிடாரியம்மன்கோயிலின் முன்பு வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஏப்ரல் 8 ஆம் தேதி கயிறுகுத்து விழாவாக நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் அக்கினிசட்டி ஏந்தி, அலகு குத்தி, முளைப்பாரி எடுத்து, மாறுவேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து புதன்கிழமை (ஏப். 10) தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.