திருச்சுழி அருகே புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.1,07,600 பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் புதன்கிழமை வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது அவரது பையில் உரிய ஆவணங்களின்றி ரூ.1,07,600 பணம் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணையில் அவர் சாத்தூர் வட்டம் இருக்கண்குடி அருகே உள்ள அரசன்குடும்பன்பட்டியைச் சேர்ந்த யாகோபா என்பவரது மகன் முத்துக்குமார் (27) என்பதும், இவர் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிபவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் அன்றைய தினம் திருச்சுழி அருகே கல்லூரணி, நார்த்தம்பட்டி ஆகிய கிராமங்களில் பல்வேறு நபர்களிடம் தவணைப் பணத்தை வசூல் செய்துவிட்டு ம.ரெட்டியபட்டி வழியாக பரளச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்தது. ஆனால் அவர் தான் வசூல் செய்ததற்கான ஆவணங்களை வைத்திருக்காததால் அப்பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரி மகேஸ்வரி, திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
மேலும் முத்துக்குமாரிடம் உரிய ஆவணங்களைக் கொண்டு வந்து ஒப்படைத்து விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுச் செல்லலாம் என தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.