அணைக்கரைப்பட்டி பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th April 2019 02:09 AM | Last Updated : 26th April 2019 02:09 AM | அ+அ அ- |

சாத்தூர் அருகே அணைக்கரைப்பட்டி பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருக்கன்குடி சாலையில் உள்ளது அணைக்கரைப்பட்டி கிராமம். கத்தாளம்பட்டி ஊராட்சியின் கீழ் உள்ள இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருக்கன்குடி செல்லும் சாலையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தான் வெளியூர்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து நிறுத்த நிழற்குடை சீரமைக்கபட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.
தற்போது இந்த நிழற்குடை சிதிலமடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதனால் பயணிகள், இந்த நிழற்குடையில் நிற்காமல் வெயிலிலும், மழையிலும் சாலையோரத்தில் நின்று பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் இந்த நிழற்குடையில் அதிகளவில் விளம்பர பிரசுரங்கள் ஒட்டப்பட்டு மிக மோசமாக காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் புதிய நிழற்குடை அமைக்க வேண்டும். அல்லது அதையே சீரமைத்து பராமரிக்க வேண்டும் எனஅணைக்கரைப்பட்டி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.