அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
By DIN | Published On : 26th April 2019 02:08 AM | Last Updated : 26th April 2019 02:08 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற போலீஸாரின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பரிசு தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் வியாழக்கிழமை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் குழந்தைகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் மகள் பத்ராவிற்கு ரூ.6,500, விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரியும் நாகராஜன் மகன் ஜீவாவுக்கு ரூ.4,500, தளவாய்புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சிங்கப்புலி மகள் கல்பனாதேவிக்கு ரூ. 2,500 மற்றும் அதற்கு அடுத்த நிலையில் மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு தலா 2,000 அரசு சார்பில் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற வீரசோழன் காவல் நிலைய தலைமைக்காவலர் முத்துலட்சுமி மகன் ஜெயரோஹித்துக்கு ரூ.7,500, ராஜபாளையம் நகர் போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் ராதாகிருஷ்ணன் மகள் மதுசுவீதாவுக்கு ரூ.5,500, திருத்தங்கல் காவல் நிலைய தலைமைக்காவலர் சுப்புராம் மகள் சுவீதாவுக்கு ரூ.3,500 மற்றும் அதற்கு அடுத்த நிலையில் மதிப்பெண்கள் பெற்ற 7 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.2,500 வீதம் பரிசு தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராஜராஜன் வியாழக்கிழமை வழங்கிப் பாராட்டினார்.