கழிவு நீரை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
By DIN | Published On : 26th April 2019 02:07 AM | Last Updated : 26th April 2019 02:07 AM | அ+அ அ- |

விருதுநகர், வைத்தியன் பொன்னப்பன் தெருவில் வாருகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுவதாகவும், எனவே, உடனே அதை அகற்ற கோரியும் அப்பகுதி பெண்கள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் நகராட்சி 15ஆவது வார்டுக்குள்பட்ட பகுதியில் வைத்தியன் பொன்னப்பன் தெரு உள்ளது. இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தத் தெருவில் பாதாளச் சாக்கடை அமைக்கப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, சிறிய வாருகால் வழியாக மேலரதவீதியில் உள்ள பிரதான கழிவுநீர் வாருகாலுக்கு செல்கிறது. இந்நிலையில், இந்த வாருகாலை சுத்தம் செய்யாததால், கழிவுநீரானது பிரதான வாருகாலுக்கு
செல்ல வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதாரக்கேடும் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி சுகாதாரப் பிரிவு ஆய்வாளர்களிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த அப்குதி பெண்கள், வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த சுகாதார ஆய்வாளர்கள், அப்பகுதி பெண்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வெள்ளிக்கிழமைக்குள் வாருகால் சுத்தம் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.