நரிக்குடி வட்டார விவசாயிகள் மானிய விலையில் நெல், உளுந்து விதைகளைப் பெற வாய்ப்பு
By DIN | Published On : 26th April 2019 02:08 AM | Last Updated : 26th April 2019 02:08 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி வட்டார விவசாயிகள் மானிய விலையில் நெல், உளுந்து விதைகளைப் பெற்றுப் பயன்பெறலாம் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெ.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு 2019-20 ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்கு ஏதுவாக என்.எல்.ஆர். மற்றும் டி.கே.எம்-13 ஆகிய ரகங்களைச் சேர்ந்த 80 டன் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. அத்துடன் உளுந்து விதைகளும் இருப்பில் உள்ளதால் இவ்வட்டார விவசாயிகள் அனைவரும் விதைப்பு நேரத்தில் நெல் மற்றும் உளுந்து விதைகளைப் பெற்றுப் பயனடையலாம்.
நிலக்கடலைப் பயிரில் ஜிப்சம் இட அறிவுறுத்தல்: நிலக்கடலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் இடும் முக்கியத்தொழில்நுட்பத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியமானதாகும். இதன்படி ஒரு ஹெக்டேருக்கு 400 கிலோ வீதம் 40 முதல் 45 நாள்கள் ஆன பாசனப்பயிருக்கும் அல்லது 40 முதல் 75 நாள்கள் வளர்ந்த மானாவாரிப் பயிருக்கும் அச்செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொருத்து இட வேண்டும். அப்போது மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு ஒன்று சேர்த்தபின் மண்ணை அணைப்பது நல்ல பலனைத்தரும். ஜிப்சத்தின் மொத்த அளவில் பாதியை ரசாயன உரங்களுடன் சேர்த்து அடியுரமாக இடுவதால் மானாவாரி மற்றும் இறைவைப் பயிரில் நூற்புழுக்களால் ஏற்படும் காளஹஸ்தி மெலடி மற்றும் நிலக்கடலைப் பயிரில் ஏற்படும் சொறி போன்ற பாதிப்புகளைக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.