கொத்தடிமைகளாக ஆடு மேய்த்த 3 சிறுவர்கள் மீட்பு: 2 பேர் மீது வழக்கு
By DIN | Published On : 06th February 2019 07:20 AM | Last Updated : 06th February 2019 07:20 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் கொத்தடிமையாக ஆடு மேய்த்த 3 சிறுவர்களை செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் மீட்டனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வில்லிபத்திரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் 3 மகன்களை கவனித்து வந்துள்ளார். ஆனால், அவரும் தனது மகன்களை விட்டு விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இவரது மகன்கள் பார்த்தசாரதி (13), சதீஷ் (13), மணிகண்டன் ஆகியோர் மல்லாங்கிணறு பகுதியில் கொத்தடிமைகளாக ஆடு
மேய்த்து வந்துள்ளனர். இது தொடர்பாக அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பாவுக்கு புகார் வந்துள்ளது. அதன் பேரில், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, காரியாபட்டி வட்டாட்சியர் ராமசுந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மல்லாங்கிணறு சென்று மூன்று சிறுவர்களை மீட்டு, விருதுநகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சேர்த்தனர். இது குறித்து வருவாய்த் துறையினர் அளித்தப்புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கொக்காடி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தவசி, ராசு ஆகியோர் மீது மல்லாங்கிணறு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்து தகவல் தெரிந்தால் 04562- 252040, 252130, 252826 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...