பிரதமரின் "வாழ்க்கை ஒளி' காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு வாகன ஊர்வலம்
By DIN | Published On : 12th February 2019 07:55 AM | Last Updated : 12th February 2019 07:56 AM | அ+அ அ- |

திருத்தங்கலில் பிரதமரின் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு பிரச்சார வாகன ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு பிரதமரின் வாழ்க்கை ஒளி காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கு, விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு ஆகியவற்றை, குறைந்த பிரீமியம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டம் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு பிரச்சார வாகனம் திருத்தங்கல் நகராட்சிக்கு வந்தது.
நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், மகளிர் சுய உதவிக்குழு வில் உள்ள பெண்களுக்கு, இதற்கான விண்ணப்படிவங்களை வழங்கியும், இத்திட்டம் குறித்தும் பேசினார். பின்னர் அவர் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர் மன்ற முன்னாள் துணைத் தலைவர் பொன்சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு வாகனம், நகரின் பிரதான வீதிகளில் சென்று மீண்டும் நகராட்சியை வந்தடைந்தது.