ராஜபாளையத்தில் "பாலீஷ்' போடுவதாகக் கூறி நகைகள் திருட்டு
By DIN | Published On : 12th February 2019 07:52 AM | Last Updated : 12th February 2019 07:52 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நகைகளுக்கு "பாலீஷ்' போடுவதாகக் கூறி நகைகளைத் திருடிச் சென்ற 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ராஜபாளையம், சக்கராஜாகோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி ரத்தினம்(62). இவரிடம் அடையாளம் தெரியாத இருவர் வீட்டிற்கு வந்து குறைந்த செலவில் தங்க நகைகளுக்கு "பாலீஷ்' போட்டு தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய ரத்தினம், தனது கையில் அணிந்திருந்த ஒரு பவுன் மோதிரம், ஒரு பவுன் எடையுள்ள 8 வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார்.
பின்னர் மர்ம நபர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மஞ்சள் பொடியை கலந்து, அதில் தங்க நகைகளை போட்டுள்ளனர். பின்னர் அந்த பாத்திரத்தை சூடுபடுத்துமாறு ரத்தினத்திடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து அந்த பாத்திரத்தை ரத்தினம் சமையலறைக்கு கொண்டு சென்று பார்த்த போது நகைகளை காணவில்லை.
இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.