திருச்சுழி அருகே பாறைக்குளத்தில் வெள்ளியம்பலநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 04th January 2019 01:24 AM | Last Updated : 04th January 2019 01:24 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் பாறைக்குளத்தில் உள்ள வெள்ளியம்பலநாதர் கோயிலில் சதுரகிரி மலையில் வாழும் 45 சிவனடியார்கள் முன்னிலையில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வெள்ளியம்பல நாதர் கோயில் நந்தீஸ்வரப் பெருமானுக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம் மற்றும் தீப தூப ஆராதனைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெள்ளியம்பல நாதருக்கு பல்வேறு அபிஷேகப்பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சதுரகிரி மலைவாழ் சிவனடியார்கள் சார்பில் சிறப்பு சிவநாம கோஷ வழிபாட்டுப் பாடல்கள் பாடப்பெற்றன. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறியது: உலக நன்மை வேண்டி, மழைவளம், விவசாய வளம் பெருகவும், பாதுமக்கள் வாழ்விலே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விஜயதசமி தொடங்கி மொத்தம் 108 நாள்கள் நடைப்பயணமாக பல்வேறு ஊர்களிலுள்ள சிவ தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி 75 ஆவது நாளான வியாழக்கிழமை பாறைக்குளம் சிவத்தலத்தில் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டோம். எங்கள் சிவவழிபாடு மற்றும் நடைப்பயணத்தை தை அமாவாசை நாளில் சதுரகிரி மலையடிவாரத்தில் நிறைவு செய்ய உள்ளோம் என்றனர்.