"நல்ல பண்புள்ள மாணவர்களை உருவாக்குவது ஆசிரியரின் கடமை'
By DIN | Published On : 04th January 2019 01:20 AM | Last Updated : 25th June 2020 06:12 PM | அ+அ அ- |

நல்ல பண்புகளை வளர்த்து மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக உருவாக்குவது ஆசிரியரின் கடமை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் கூறினார்.
விருதுநகரில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் சார்பில் சிறப்புப் பயிற்சி மைய தன்னார்வ ஆசிரியர்களுக்கு "மகிழ்ச்சியான குடும்பம் மகிழ்ச்சியான உலகம்' என்ற தலைப்பில் வியாழக்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தொடங்கி வைத்து, பயிற்சிக்கான குறுந்தகடை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியது: ஒரு மாணவன் நல்ல மனிதராக வேண்டுமானால் நல்ல பண்புகள் உருவாக வேண்டும். தற்போது குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம் நல்ல பண்புகள் இல்லாததே. எனவே, மாணவர்களுக்கு பொறுமை, அமைதி போன்றவற்றை கற்றுத்தர வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் சமுதாயமே குடும்பமாக செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் ஆத்மார்த்தமாக செயல்பட்டாலே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என்றார்.
மேலும் தொழிலாளர் திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், 100 சதவிகிதம் வங்கிக் கணக்கு தொடங்கிய சிறப்புப் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆட்சியர் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இப்பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(கணக்கு) என். ராமகிருஷ்ண அய்யலு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் தி.நாராயணசாமி, வேல்டு விஷன் இந்தியா திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.