ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 01:21 AM | Last Updated : 04th January 2019 01:21 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கடந்த 5 வருடங்களாக பகல் நேரத்தில் நகருக்குள் ஒருவழிப் பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தென்காசி சாலையில் ஒரு வழிப்பாதைத் திட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பகல் நேரத்தில் வியாபாரிகள் சாலை ஓரம் லாரிகளை நிறுத்தி பொருள்களை இறக்குவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து ராஜபாளையம் வியாபார சங்கக் கட்டடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர்.
வெள்ளிக்கிழமை முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நகருக்குள் கனரக வாகனங்களை நிறுத்திப் பொருள்களை இறக்கத் தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் பிற்பகல் 2 முதல் 4 மணி வரை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தி பொருள்களை இறக்க காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.
இதில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.