"விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கின்றன'
By DIN | Published On : 04th January 2019 01:22 AM | Last Updated : 04th January 2019 01:22 AM | அ+அ அ- |

அனைத்து வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க வங்கி நிர்வாகங்கள் மறுத்து வருவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தெரிவித்தார்.
விருதுநகரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் தென் மண்டல உயர்மட்ட செயற்குழு கூட்டம் மாநிலத் துணை தலைவர் ரங்குதாஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு பேசினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தென் மாவட்டத்தில் அதிகளவு பயிரிடப்பட்ட மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க புழுக்கள் தாக்குதலால் அனைத்தும் அழிந்து விட்டன. எனவே, ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் மக்காச்சோளம், வாழை, பருத்தி போன்ற பயிர்களை அதிகளவு விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பூச்சிகள் தாக்குதலால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
காப்பீடு செலுத்தினால் பிர்க்கா அளவில் பாதிக்கப்பட்டால் மட்டுமே காப்பீடு வழங்குவோம் என தெரிவிக்கின்றனர். தனி விவசாயி பாதிக்கப்பட்டால் நிவாரணம் கொடுக்க வேண்டும் என சட்டம் கூறுகிறது. ஆனால் அதை அமல்படுத்த மறுக்கின்றனர். தற்போது விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள், மான்கள், குரங்குகள் நாசம் செய்கின்றன. எனவே, வன விலங்குகளை சுடுவதற்கு விவசாயிகளுக்கு துப்பாக்கி வழங்க அனுமதிக்க வேண்டும்.
காவிரி- குண்டாறு திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருந்தால் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. விருதுநகர் மாவட்டத்தில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 90 சதவீத பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.
வங்கிகளில் கடன் வாங்க செல்லும் விவசாயிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற்று வர கூறுகின்றனர். இதை காரணம் காட்டி வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கின்றனர். இதை தடை செய்து அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக வங்கிகளில் கடன் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது, விருதுநகர் மாவட்ட தலைவர் சங்கையா உட்பட விவசாய சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.