விருதுநகர் ராமமூர்த்தி சாலை மேம்பால பணிகள் தாமதம்: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 07th January 2019 05:58 AM | Last Updated : 07th January 2019 05:58 AM | அ+அ அ- |

விருதுநகர் ராமமூர்த்தி சாலை மேம்பால பணிகள் தாமதமாவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விருதுநகர், ராமமூர்த்தி சாலை ரயில்வே கடவுப்பாதை வழியாக தினமும் 60 -க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், அடிக்கடி கடவுப்பாதை பூட்டி திறக்கப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.
எனவே, இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2008 இல் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு மேம்பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் 8.5 மீ அகலத்தில் மேம்பாலத்தை மட்டும் ரூ.21 கோடியில் கட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, கடந்த 2016 மார்ச் 4 இல் பணிகள் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும் என அப்போது கூறப்பட்டது. ஆனால், பாலத்தின் இரு பகுதிகளிலும் இன்னும் சாலைகள் அமைக்கப்படவில்லை.
மேலும், மேம்பாலப் பகுதிகளில் தெரு விளக்குகள், கீழ்ப் பகுதியில் மழை நீர் சேகரிப்பு, பாதசாரிகள் ராமமூர்த்தி சாலையை கடக்க படிக்கட்டுகள் அமைக்கும் பணி, அணுக சாலை உள்ளிட்டவையும் தொடங்கப்படவில்லை.
இதனால், கடந்த 3 ஆண்டுகளாக மாற்றுப் பாதை வழியாக செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடித்து பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.