எல்.கே.ஜி. வகுப்புக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 09th June 2019 02:47 AM | Last Updated : 09th June 2019 02:47 AM | அ+அ அ- |

தமிழக அரசு எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்ததைக் கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் ஆரம்பப் பள்ளி கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மாநில அளவில் தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளை புதிதாக தொடங்கி உள்ளது. இப்பள்ளிகளுக்கு, ஏற்கெனவே ஆரம்பப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டு இருப்பவர்களை நியமித்துள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க வட்டாரச் செயலர் உத்தண்ட சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் கண்ணன் கண்டன உரையாற்றினார். வட்டாரத் தலைவர் அந்தோணி, பொருளாளர் சிவக்குமார் உள்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஐவேல் மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வைரமுத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டப் பொருளாளர் வெள்ளக்குட்டி வாழ்த்திப் பேசினார். வேல்ராஜ், டென்சிங் காந்தி உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.