விருதுநகரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 07:56 AM | Last Updated : 14th June 2019 07:56 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். இதில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முழுமையாக அனைத்து பாடப் புத்தகங்களையும் உடனே வழங்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், காலதாமதப்படுத்தாமல் புத்தகம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் பிரசாந்த் உள்பட இந்திய மாணவர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.