விருதுநகரில் வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டம்
By DIN | Published On : 14th June 2019 07:55 AM | Last Updated : 14th June 2019 07:55 AM | அ+அ அ- |

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு, வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் எழுந்தருளிய தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் பொங்கல் விழா ஜூன் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் காப்பு கட்டி கொடிமரத்துக்கு தண்ணீர் ஊற்றி வந்தனர். செவ்வாய்க்கிழமை பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதன்கிழமை, அக்கினிச் சட்டி எடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை, வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தேசபந்து மைதானத்திலிருந்து தொடங்கிய இத்தேரோட்டத்தில், முன்னால் சிறிய தேரில் விநாயகர் செல்ல, தொடர்ந்து பெரிய தேரில் வெயிலுகந்தம்மன், பராசக்தி மாரியம்மன் சென்றனர். பஜார் வழியாகச் சென்ற தேரானது, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியாக மீண்டும் நிலையை அடைந்தது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இத்தேரோட்டத்தை முன்னிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.