தண்ணீருக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மக்கள் தவிப்பு!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்கள் தண்ணீருக்காக தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
        விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
       இந்நிலையில், நகராட்சிப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவைக்காக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத் தோப்பில் உள்ள பேயனாற்றுப் படுகையில் 7 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டு, குடிநீர் எடுக்கப்பட்டு வந்தது. 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கிருந்து பெறப்பட்ட தண்ணீரே நகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்தது. ஆனால், அப்போது மக்களுக்கு தினமும் குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வந்தது. 
      இதன்மூலம், தினமும் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் நகராட்சிப் பகுதிக்கு தேவைப்படுகிறது. ஆனால், தற்போது தாமிரவருணி திட்டம் மூலம் சுமார் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது. 
     ஒருபுறம் பேயனாறு குடிநீர், மறுபுறம் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டும், தற்போது பொதுமக்கள் 25 நாள்களுக்கும் மேலாக குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீரை முறைப்படுத்தி வழங்க வேண்டிய குடிநீர் வழங்கல் மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்கள் சரியாக கவனம் செலுத்தாததால், குடிநீர் விநியோகம் சீரற்ற நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
     தற்போது, தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் அமலில் உள்ளதால், நகராட்சி நிர்வாகமும் செண்பகத்தோப்பு பேயனாற்றுப் படுகை திட்டத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. 
     இதனால், தற்போது பேயனாற்றுப் படுகையிலிருந்து குறைந்தளவு தண்ணீரே பெறப்படுகிறது. பற்றாக்குறைக்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை குடிநீர் வழங்கல் துறை  எடுக்கவில்லை. 
       இது குறித்து ஜி.எம். நகரைச் சேர்ந்தோர் கூறியது: அவ்வப்போது குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்வதில் நகராட்சி கவனம் செலுத்துவதில்லை. பதிக்கின்ற குழாய்களும் தரமானதாக இல்லாததால், அவை சில வாரங்களிலேயே உடைந்து விடுகின்றன.
 இப்பணி ஒப்பந்த அடிப்படையில் விடப்படுவதால், நகர குடிநீர் வழங்கல் பிரிவு அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய்களின் தரத்தை மதிப்பிடுவதில்லை.
   பட்டத்தரசியம்மன் கோயிலை ஒட்டிய தெருவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. முறையாக குடிநீர் வரி வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம், இப் பகுதிக்கு குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
     தரமற்ற குழாய்களை பதித்தவர்கள் மீது துறை ரீதியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
      மொத்தத்தில், நகராட்சி குடிநீர் வழங்கல் துறை பழைய பேயனாற்றுப் படுகை திட்டத்திலும், தற்போதைய தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலும் உரிய கவனம் செலுத்தவில்லை. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர மக்கள் தண்ணீருக்காக கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com