சாத்தூர் பகுதி கோயில்களில் மகா சிவராத்திரி விழா
By DIN | Published On : 06th March 2019 07:29 AM | Last Updated : 06th March 2019 07:29 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சாத்தூர் அருகே எதிர்கோட்டை கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த தெலுங்கு விஸ்வ பிராமண சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட ஜானகி ஈஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா 3 நாள்கள் நடைபெற்றது. சனிக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் சிறப்புப் பூஜைகள் தொடங்கின. பின்னர், குத்துவிளக்கு பூஜை, முளைப்பாரி, பால்குடம் வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை இரவு முதல் அதிகாலை வரை லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், இச்சமுதாயத்தினர் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத் தலைவர் ஆர். சீனிராஜ், வி. பாலசுப்பிரமணியன், செயலாளர்கள் பி. மாரியப்பன், ஜே. ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் செய்திருந்தனர்.
இதேபோன்று, சாத்தூர் அருகே உள்ள கைலாசநாதர் கோயில், நடுவபட்டியில் உள்ள கெங்கம்மாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.