விருதுநகரில் இன்று திமுக தென் மண்டல மாநாடு: மு.க. ஸ்டாலின் பங்கேற்பு
By DIN | Published On : 06th March 2019 09:28 AM | Last Updated : 06th March 2019 09:28 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் புதன்கிழமை திமுக தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார்.
பட்டம்புதூரில் நான்கு வழிச்சாலை அருகே 20 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 65 ஏக்கர் இடம் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண், பெண் தொண்டர்கள் அமருவதற்கு தனி தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு அமைப்பு பணிகளை ஏற்பாடுகளை விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்எல்ஏ, வடக்கு மாவட்டச் செயலர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோரது மேற்பார்வையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ. ஆர்.ஆர். சீனிவாசன், தங்க பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மாநாட்டுப் பணிகளை செவ்வாய்க்கிழமை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டனர். மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என இரண்டு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர் என அவர்கள் தெரிவித்தனர்.