விருதுநகர் அருகே லாரி மீது கார் மோதி கணவன், மனைவி சாவு
By DIN | Published On : 22nd March 2019 07:57 AM | Last Updated : 22nd March 2019 07:57 AM | அ+அ அ- |

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை நள்ளிரவு நின்று கொண்டிருந்த லாரி மீது, கார் மோதியதில் திருப்பூரைச் சேர்ந்த கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பூர், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (53). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48). இவர்களது மகன் சுடலை மணி. புதன்கிழமை இரவு திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இவர்கள் அனைவரும் காரில் சென்றனர். காரை சுடலைமணி ஓட்டி வந்தார். இந்நிலையில் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நடுவபட்டி அருகே நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முருகவேல் (30) என்பவர், தனது சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரியை நிறுத்தியிருந்தார்.
அப்போது, சுடலைமணி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது பின்புறமாக மோதியது. இதில், காரில் பயணம் செய்த கோபால், அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுடலைமணிக்கு சிறிய காயம் ஏற்பட்டதால், அவரை சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...