"காங்கிரஸ், திமுக வெளியிட்டிருப்பது வெற்று அறிக்கை'
By DIN | Published On : 28th March 2019 08:08 AM | Last Updated : 28th March 2019 08:08 AM | அ+அ அ- |

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது வெற்று அறிக்கை என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விமர்சித்தார்.
விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு சேகரிப்போர் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.சந்திரபிரபா தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட அமைச்சர்
கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியது:
தீவிரவாதத்தை ஒழித்து, இந்தியாவை வலிமையாக வழிநடத்தி செல்பவர் பிரதமர் மோடி. மத்தியில் அவர் தலைமையிலான ஆட்சி மீண்டும் வர வேண்டும். ஏழை எளிய மக்களின் வாழ்வை கருத்தில் கொண்டு ஆட்சியை நடத்தும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும்.
எனவே, நாட்டை முன்னேறப் பாதையில் கொண்டு செல்ல வாக்காளர்கள் அதிமுகவிற்கும், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும். விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் அழகர்சாமிக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். சாத்தூரில் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜவர்மனை ஆதரிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் வேட்பாளர் ஆர்.அழகர்சாமி பேசியது : நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். எனவே எனக்கு மக்களின் தேவை எது என நன்றாகத் தெரியும். முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் தங்கராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ராஜபாண்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்அழகர்சாமி அறிமுகக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியை நடத்துவது என்பது திரைப்படம் தயாரிப்பதுபோல என கமல் நினைக்கிறார். அரசியல் என்பது அடித்தட்டு மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு செயல்படுவது. கமலின் செயல்பாடு தமிழக மக்களுக்கு துளியும் பிடிக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது வெற்று அறிக்கை. அவற்றை செயல்படுத்த இயலாது. தேர்தலுக்குப் பின்னர் டிடிவி.தினகரன் காணாமல் போய்விடுவார் என்றார் அமைச்சர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...