விருதுநகர் ரயில்வே மேம்பாலப் பணிகளில் குறைபாடு: நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு
By DIN | Published On : 28th March 2019 08:13 AM | Last Updated : 28th March 2019 08:13 AM | அ+அ அ- |

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதை வழியாக தினந்தோறும் 60 -க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி கதவு மூடி திறப்பதால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால், அரசு மருத்துவ
மனைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ராமமூர்த்தி சாலையில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் நீதிமன்றம் சென்று இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை, தரைப்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனால், மேம்பால பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந் நிலையில், ராமமூர்த்தி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2016 மார்ச் இல் மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.
தற்போது, மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், பக்கவாட்டில் படிக்கட்டுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை தவிர்த்து பிற பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டன. ஆனால், இந்த பாலம் வாகனங்கள் செல்வதற்கு உரிய அனுமதி வழங்காத நிலையில், தற்போது இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த வழக்குரைஞர் மாசிலாமணி என்பவர் நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். அதில், ரயில்வே தண்டவாளத்தின் மேற்கு பகுதியில் மேம்பாலத்தின் வரைப்படத்தின்படி 10 தூண்கள் அமைத்து 264 மீட்டர் நீளம் இருக்க வேண்டும். தற்போது ஒன்பது தூண்கள் அமைத்து, 246 மீட்டர் நீளமே மேம்பாலம் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், இது குறித்த விசாரணை விருதுநகரில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்ட இடத்திலேயே நடைபெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், பரமக்குடி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் மதியழகன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ரயில்வே மேம்பால பணிகளை புதன்கிழமை அளவீடு செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்த அறிக்கை நெடுஞ்சாலை துறை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது இது குறித்து வேறு எதுவும் தெரிவிக்க இயலாது என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...