சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா: மார்ச் 31 இல் கொடியேற்றம்
By DIN | Published On : 30th March 2019 07:31 AM | Last Updated : 30th March 2019 07:31 AM | அ+அ அ- |

சிவகாசியில் மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா கொடியேற்றம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) நடைபெற உள்ளது.
இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஞாயிறு அன்று இரவு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
பின்னர் தினசரி இரவு அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் ஆறாம் திருவிழாவின்போது, காலையில் அம்பாள் வீதி உலா வந்து , தண்ணீர்பந்தல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறும். மறுநாள் 7 ஆம் திருவிழாவின்போது, புஷ்ப பல்லக்கில் அம்பாள் சயன கோலத்தில் சீர்வரிசைகளுடன் வீதி உலாவும், பின்னர் அம்பாள் யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும்.
ஏப்ரல் 7 ஆம் தேதி 8 ஆவது நாள் விழாவான பொங்கல் திருவிழாவாகும். அன்று காலையில் பக்தர்கள் கோயிலின் முன்பு பொங்கலிடுவார்கள். அன்று மாலை அம்பாள் குதிரை வாகனத்தில் முப்பிடாரியம்மன் கோயிலின் முன்பு வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். மறுநாள் கயிறுகுத்து திருவிழாவாகும்.
அன்று பக்தர்கள் அலகு குத்தி, அக்கினி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மறுநாள் தேரோட்டம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...