ஆயிரங்கண் மாரியம்மன் பூப்பல்லக்கில் வீதி உலா
By DIN | Published On : 05th May 2019 03:03 AM | Last Updated : 05th May 2019 03:03 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரிலுள்ள புளியம்பட்டி-திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
இக்கோயிலில் 99 ஆவது பங்குனிப்பொங்கல் திருவிழா கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 30 ஆம் தேதி திருப்பொங்கல் விழாவும் மறுநாள் புதன்கிழமை அக்கினிச்சட்டியும், வியாழக்கிழமை தேர்த் திருவிழாவும் நடைபெற்றன.
திருவிழாவின் 11 ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு தீப,தூப ஆராதனை நடைபெற்றதும் உற்சவராக பூப்பல்லக்கில் ஆயிரங்கண் மாரியம்மன் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து பாவடித்தோப்பு, புளியம்பட்டி, காந்தி திடல், வேலாயுதபுரம், திருநகரம் வழியாக பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
அப்போது திரளான பக்தர்கள் அம்மனைக் கண்டு பக்தியுடன் வழிபட்டனர்.