எலுமிச்சை விலை கடும் உயர்வு: கிலோ ரூ.160
By DIN | Published On : 05th May 2019 03:03 AM | Last Updated : 05th May 2019 03:03 AM | அ+அ அ- |

வரத்து குறைவு மற்றும் கோடை வெப்பம் காரணமாக விருதுநகர் சந்தையில் எலுமிச்சம் பழம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ளதால் மதிய வேளைகளில் பொதுமக்கள் வீட்டுக்கு வெளியில் வர அச்சப்படுகின்றனர். அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் அடித்து வருகிறது.
கோடை வெயிலில் தப்பிக்க நுங்கு, இளநீர், வெள்ளரி, ஜூஸ், பழ வகைகளை பொதுமக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சர்பத், எலுமிச்சை ஜூஸ் போடுவதற்காக பொதுமக்கள் எலுமிச்சம்பழத்தை வாங்கி வருகின்றனர்.
சங்கரன்கோவில் பகுதியில் விளையும் எலுமிச்சம்பழம் விருதுநகர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கோடை வெப்பம் மற்றும் வரத்து குறைவு காரணமாக எலுமிச்சம் பழம் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
விருதுநகர் சந்தையில் எலுமிச்சம்பழம் கிலோ ரூ.160-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பொது மக்கள் வேறு வழியின்றி வாங்கி செல்கின்றனர்.
இதன் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.