சதுரகிரி மலையில் தண்ணீர் தட்டுப்பாடு குரங்குகளின் தாகம் தீர்க்கும் பக்தர்கள்
By DIN | Published On : 05th May 2019 03:03 AM | Last Updated : 05th May 2019 03:03 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைப் பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் தண்ணீரின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பக்தர்கள் தண்ணீர் வழங்குகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் மட்டும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பெருமளவில் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தற்பொழுது சதுரகிரி மலைப்பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் மான், மிளா, குரங்கு, கரடி, காட்டுமாடு, யானை ஆகிய வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை பக்தர்கள் அமாவாசை பூஜைக்காக மலை ஏற அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது குரங்குகள் தண்ணீரின்றி தவிப்பதை பார்த்த பக்தர் ஒருவர் தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை குரங்குகளுக்கு கொடுத்தார். தண்ணீர் பாட்டிலில் இருந்து குரங்குகள் தண்ணீரை ஆர்வத்துடன் பருகி தாகத்தை தீர்த்துக் கொண்டன. இச்சம்பவம் பக்தர்கள் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. உடனடியாக அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த தண்ணீரை குரங்குகளுக்கு கொடுத்தனர்.
சதுரகிரி மலையில் நடைபெற்று வந்த அன்னதான மடங்களை அறநிலையத்துறை மூடியதால், மலை ஏறி வரும் பக்தர்கள் உணவு கிடைக்காமல் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சுகாதாரமற்ற உணவு விடுதிகளை நாடி உணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சதுரகிரியில் தண்ணீர் வசதி, அன்னதான வசதி உள்ளிட்டவைகளை செய்து தர
வேண்டும். வனவிலங்குகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.