விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் சுக்கில நத்தம் கிராமத்தில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாய்ந்துள்ள மின் கம்பத்தைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை அருகே சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சுக்கிலநத்தம் கிராமம். இக்கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு வரும் பிரதானச் சாலையில் உள்ள மின் கம்பம் ஒன்று சுமார் 45 டிகிரி அளவிற்குச் சாய்ந்து விட்டது. மேலும் அதன் கான்கிரீட் சேதமடைந்து இரும்புக்கம்பிகளும் துருப்பிடித்த நிலையில் வெளியில் தெரிகின்றன.
அத்துடன் அம்மின்கம்பத்தின் உயரழுத்த மின்கம்பிகள் தற்போது சாலையோரம் உள்ள மரத்தின்மீது உரசிய வண்ணம் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
உயரழுத்த மின்கம்பிகள் பலத்த காற்று அல்லது மழைக்கு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது அறுந்துவிழும் அபாயச்சூழல் உள்ளது. இச்சாலையில், பள்ளிவாகனங்களும் நாள்தோறும் சென்றுவருவதால் விரைவில் இம்மின்கம்பத்தைச்சீரமைக்க கிராமத்தினர் பலமுறை மின்வாரியத்திடம் புகார் அளித்தும் யாதொரு நடவடிக்கையும் இல்லையெனப் புகார் எழுந்துள்ளது.
எனவே விபத்து அபாயத்திலுள்ள மின்கம்பத்தைச் சீரமைத்திட மீண்டும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.