விருதுநகர்- அருப்புக்கோட்டை இடையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் வைக்கப்பட்டுள்ள மரப்பொருள்களால் தீ விபத்து அபாயம் உள்ளது.
விருதுநகர்- அருப்புக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடிப் பகுதியில் வீட்டுக்கு தேவையான மரச் சாமான்கள் ஆங்காங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பாலத்தில் உள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால், பாலத்தின் அடிப் பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், மரச் சாமான்கள் குவித்து வைத்திருப்பதை பயன்படுத்தி திருடர்கள் மறைந்திருந்து அடிக்கடி அப்பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இப்பகுதியில் உள்ள வீட்டின் முன் அமர்ந்து பேசி கொண்டிருந்த பெண் ஒருவரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நான்கு பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
மேலும், மரக் குவியல்களில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிப்படைவதுடன், மேம்பாலமும் பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள மரச் சாமான்கள் மற்றும் ஆக்கிரமிப்பு கடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.