வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 03:03 AM | Last Updated : 05th May 2019 03:03 AM | அ+அ அ- |

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா அதிக கிராமங்களை உள்ளடக்கியது. பட்டாசுத் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள இப்பகுதியில் தொழிலாளர்கள் அருகில் உள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்கு செல்ல, தற்போது வரை இப்பகுதியினர் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலிலும், மழையிலும் காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்த பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றவும், இறக்கவும் செய்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகான வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி வெம்பக்கோட்டையில் பேருந்துகள் நின்று செல்வதற்கு ஏதுவாக, இருக்கை வசதியுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.