ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடைக்கு பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைப்பு
By DIN | Published On : 05th May 2019 01:21 AM | Last Updated : 05th May 2019 01:21 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் பாதாளச் சாக்கடை குழாய் பதிக்கும் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிவருகிறது.
ராஜபாளையம் நகராட்சியின் 22 ஆவது வார்டுக்கு உள்பட்டது அசோக் டாக்கீஸ் தெரு. இந்த பகுதியில் கடந்த 4 தினங்களுக்கு முன்னதாக பாதாளச் சாக்கடை திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. குழாய் பதிக்க தோண்டியபோது, ஏற்கெனவே அருகே இருந்த குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இந்த உடைப்பை சரி செய்யாமல், பாதாளச் சாக்கடை குழாயை மட்டும் பதித்துவிட்டு குழியை மூடிவிட்டனர்.
அடுத்த நாள் இந்த பகுதிக்கு குடிநீர் வரும் நாள் என்பதால், தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் மூலம் தண்ணீர் வெளியேறியது. கடந்த 2 தினங்களாக தண்ணீர் வெளியேறி வருகிறது.
தற்போது அப்பகுதியில் குடிநீர் குளம் போல தேங்கி உள்ளது. நீர் வெளியே செல்ல வழி இல்லை என்பதால், கடந்த 2 தினங்களாக ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் கழிவு நீர் ஓடையில் கலந்து வீணாகி வருகிறது.
தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக 10 தினங்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இவ்வாறு தண்ணீர் வீணாவது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருவதாக இப் பகுதி பொது மக்கள் தெரிவித்தனர். குழாய் உடைப்பை சரி செய்யக் கோரி, நகராட்சி பணியாளர்களிடம் கூறினால் அவர்கள் அதை கண்டு கொள்ளாமல், தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
எனவே நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு தண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...