வரதட்சணை கொடுமை: கணவர் கைது
By DIN | Published On : 15th May 2019 07:02 AM | Last Updated : 15th May 2019 07:02 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அதிக வரதட்சணை கேட்டு இளம் பெண்ணை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் செல்விக்கும் (23), சேத்தூர் காமராஜர் நகரைச் சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ஸ்டாலின்ராஜ் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக 10 பவுன் நகைகள், ரூ. 50,000 ரொக்கம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தம்பதி இருவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கணவர் தன்னை வெறுத்து ஒதுக்கி வருவதாகவும் கணவரின் சகோதரியான விஜயா கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் ஆய்வாளர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.