சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள்-போலீஸார் அச்சம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
By DIN | Published On : 19th May 2019 04:15 AM | Last Updated : 19th May 2019 04:15 AM | அ+அ அ- |

சாத்தூர், ஏழாயிரம்பண்ணையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது ஏழாயிரம்பண்ணை ஊராட்சி. இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் பழைய ஏழாயிரம் பண்ணை, ஏழாயிரம் பண்ணை பகுதியில் உள்ள வடக்கு தெரு, தெற்கு தெரு, ராஜீவ்நகர், அரண்மனை தெரு, பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன.
இதனால் தெருக்களில் பொதுமக்கள் நடமாடவும் சிறுவர்கள் விளையாடவும் அச்சப்படும் நிலை உள்ளது. மேலும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர்களை தெரு நாய்கள் துரத்துவதால் பல்வேறு விபத்துகளும் ஏற்பட்டுள்ளன. நாய்கள் கடித்து ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் செல்லும் காவல் துறையினரையும் தெரு நாய்கள் விட்டு வைக்கவில்லை. இதனால் முழுமையாக இரவு நேரங்களில் ரோந்து செல்ல முடியவில்லை என்று காவல் துறையினரும் குற்றம்சாட்டுகின்றனர். நாய்களை கட்டுபடுத்த ஊராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர் பகுதியில்...: இதே போன்று சாத்தூர் நகராட்சிகுட்பட்ட அண்ணாநகர், குருலிங்காபுரம், படந்தால், மாரியம்மன் கோயில், முருகன்கோயில், பிள்ளையார்கோயில் தெரு, மேலகாந்திநகர், வெள்ளகரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் இந்த பகுதியில் சிறுவர்கள், பெரியவர்கள் நடமாட முடியவில்லை. பிரதான சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. ஏராளமானோரை நாய்கள் கடித்து காயப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.