விருதுநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்கக் கோரிக்கை
By DIN | Published On : 26th May 2019 12:40 AM | Last Updated : 26th May 2019 12:40 AM | அ+அ அ- |

விருதுநகர் இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் பாண்டியன் நகர் செல்லும் சாலையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில், பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிகிச்சைக்காகவும், உடல் பரிசோதனைக்காகவும் தினந்தோறும் வருவது வழக்கம்.
இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஒரு மருத்துவர் விடுமுறை எடுத்தால், மற்றொரு மருத்துவரால் அன்றைய தினம் வரும் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்களை மற்றொரு நாளில் வருமாறு அறிவுறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நோயின் தன்மை அதிகம் உள்ளவர்கள் உடனடி சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவசர சிகிச்சைக்காக மதுரை உள்ளிட்ட பிற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, விருதுநகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கூடுதலாக ஒரு மருத்துவர் நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.