ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் அரசுக் கல்லூரிகள் அமைக்கக் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என  தமிழக கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published on
Updated on
1 min read


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என  தமிழக கல்வி பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.தங்கவேல் சனிக்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: விருதுநகர் மாவட்டத்தில் 6 சட்டபேரவைத் தொகுதிகள் உள்ளன.  விருதுநகர் மாவட்டம் வறட்சி பகுதியாக உள்ளதால், இந்த பகுதி மக்கள் விவசாயக் கூலியாகவும் தொழிற்சாலை சார்ந்த கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இதனால் போதிய வருவாய் இல்லாததால், தங்களுடைய குழந்தைகளை அருகில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்க முடியாமல், நெடுந்தொலைவில் உள்ள அரசுக் கல்லூரிகளை நாடவேண்டியுள்ளது. 
மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தைப் பின்தங்கிய மாவட்டமாக அறிவித்துள்ளது. இம்மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், காலை ஒரு பிரிவு, பிற்பகல் ஒரு பிரிவு என 2 பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறுகின்றன. 
ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கீழராஜகுலராமன், புதூர் கோபாலபுரம், கிழவிகுளம், செந்தட்டியாபுரம், முறம்பு, தளவாய்புரம் போன்ற பகுதிகளில் இருந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, கான்சாபுரம் மகாராஜபுரம், கோட்டையூர், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், காடனேரி, அழகாபுரி போன்ற பகுதிகளிலிருந்தும் அரசு கல்லூரிகளுக்குச் செல்ல 3 பேருந்துகளில் பயணம்  வேண்டிய நிலை உள்ளது.
பிற்பகல் வகுப்புக்குச் செல்லும்  மாணவிகள் வீடு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிடுகிறது. 
எனவே தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பெயரிலும்,  ராஜபாளையத்தில் அய்யனார் பெயரிலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது தொழில் நுட்பக் கல்லூரி தொடங்க  வேண்டும் என  கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.