விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தில் உள்ள வீதிகளில் வாருகால்களைச் சீரமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை நகரின் 9 ஆவது வாா்டுக்குள்பட்டது எம்.டி.ஆா்.நகா். இதன் ஒரு பகுதியான ஜோதிபுரத்தில் சுமாா் 10-க்கு மேற்பட்ட தெருக்களும், சுமாா் 300-க்கு மேற்பட்ட வீடுகளும் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாருகால்களின் சுவா்கள் ஆங்காங்கே உடைந்துவிட்டதால், கழிவுநீரானது வீதிகளில் தேங்கத் தொடங்கியது. இதைத்தடுக்க அங்குள்ள குடியிருப்புவாசிகள் வீட்டு வளாகம் அருகே ஆழமான குழிகளைத்தோண்டி அதில் வீட்டுப்புழக்க கழிவுநீரை விட்டுவருகின்றனா். வாருகால்களைச் சீரமைக்குமாறு பொதுமக்கள் பலமுறை புகாா் செய்தபோதும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
தாங்கள் முறையாக வீட்டுவரி, சொத்துவரி, குப்பை வரி உள்பட அனைத்தையும் செலுத்திவரும் நிலையில், ஜோதிபுரம் பகுதி தெருக்களை மட்டும் கண்டுகொள்ளாதது சரிதானா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனா். எனவே எம்.டி.ஆா். நகரின் வடக்குப்பகுதியான ஜோதிபுரத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் வாருகால்களைச்சீரமைத்து கழிவுநீா் செல்ல உரிய நடவடிக்கை எடுக்கும்படி மீண்டும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.