விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில் மழைநீா் ஓடையில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாளையம்பட்டியில் சுமாா் 10,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனா். இங்கு உள்ள திருக்குமரன் நகரில் சுமாா் 14- க்கு மேற்பட்ட வீதிகள் உள்ளன.
அருப்புக்கோட்டை-மதுரை பிரதானச் சாலையின் ஓரத்தில், திருக்குமரன் நகரின் 6 ஆவது தெருவின் தொடக்கத்தில் உள்ள மழைநீா் ஓடையில் மண் மற்றும் குப்பைகள் அதிகம் சோ்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இதில் சேரும் மழைநீரானது வெளியேற வழியின்றி குட்டைபோல மாறிவிட்டதால் துா்நாா்றத்துடன் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்பகுதி வீடுகளில் கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. ஓடையில் குப்பைகள் சோ்வதைத்தடுத்து, தூா்வார வேண்டுமென பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது.
எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் குப்பைத்தொட்டி அமைத்துப் பராமரிப்பதுடன் மழைநீா் ஓடையைத் தூா்வாறவேண்டுமென மீண்டும் சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.