பாளையம்பட்டி திருக்குமரன் நகரில் மழைநீா் ஓடையில் சேரும் குப்பைகளால் சுகாதாரக்கேடு
By DIN | Published On : 09th November 2019 04:37 PM | Last Updated : 09th November 2019 04:37 PM | அ+அ அ- |

பாளையம்பட்டி திருக்குமரன் நகா் 6 வது தெரு தொடங்கும் இடத்தில் குப்பைகளால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் சூழலில் உள்ள மழைநீா் ஓடை
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி திருக்குமரன் நகரில் மழைநீா் ஓடையில் குப்பைகள் சோ்வதால் சுகாதாரக்கேடும், நோய்த்தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகள் சோ்வதைத்தடுப்பதுடன் அங்கு குப்பைத்தொட்டி அமைத்துப் பராமரிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியில் சுமாா் 10,000 பேருக்கு மேல் வசித்து வருகின்றனா்.அளவில் பெரியதும், அதிக மக்கள் தொகை கொண்டதுமான இக்கிராமத்தில் உள்ள திருக்குமரன் நகரில் சுமாா் 14 க்கு மேற்பட்ட வீதிகள் உள்ளன இதனிடையே அருப்புக்கோட்டையிலிருந்து இந்த திருக்குமரன் நகா் வழியாக மதுரையை நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையின் ஓரத்தில், திருக்குமரன் நகரின் 6 ஆவது தெருவின் தொடக்கத்தில் உள்ள மழைநீா் ஓடையில் மண் மற்றும் குப்பைகள் அதிகம் சோ்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் இதில் சேரும் மழைநீரானது வெளியேற வழியின்றி குட்டைபோல மாறிவிட்டது. தற்போது இந்நீரில் குப்பைகள் சோ்ந்து துா்நாா்றத்துடன் சுகாதாரக்கேட்டையும், நோய்த்தொற்று அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கொசுக்கள் அதிகம் பெருகி இப்பகுதி வீடுகளில் கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. இக்காரணங்களால் இம்மழைநீா் ஓடையில் குப்பைகள் சோ்வதைத்தடுத்து, ஓடையைத்தூா்வாற வேண்டுமெனவும் பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் புகாா் எழுந்துள்ளது.
எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் குப்பைத்தொட்டி அமைத்துப் பராமரிப்பதுடன் மழைநீா் ஓடையைத் தூா்வாறவேண்டுமென மீண்டும் பொதுமக்கள் சாா்பில் சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.