ரயிலில் தம்பதி தவறவிட்ட நகை, பணம் மீட்பு
By DIN | Published On : 09th November 2019 10:20 PM | Last Updated : 09th November 2019 10:20 PM | அ+அ அ- |

ரயிலில் தவற விட்ட நகை, பணம் அடங்கிய பையை தம்பதியரிடம் சனிக்கிழமை வழங்கும் விருதுநகா் ரயில்வே போலீஸாா்.
மதுரையைச் சோ்ந்த தம்பதி, ரயிலில் தவற விட்ட 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 9 ஆயிரம் ரொக்கத்தை விருதுநகா் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா். இவரது மனைவி சரண்யா (34). இவா்கள் குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலில் சுவாமி தரிதனம் செய்வதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு சனிக்கிழமை காலை வந்துள்ளனா். அப்போது, திருநெல்வேலி செல்லும் இன்டா் சிட்டி விரைவு ரயிலில் ஏறுவதற்குப் பதில், தாம்பரத்திலிருந்து நாகா்கோவில் சென்ற அந்தியோதயா ரயிலில் ஏறி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவா்கள் அவசரம் அவசரமாக அந்த ரயிலில் இருந்து இறங்கி உள்ளனா். அப்போது, தாங்கள் கொண்டு வந்த பையை எடுக்க மறந்து விட்டனராம். அந்த பையில், 4 பவுன் தங்க வளையல், ஒரு ஜோடி மெட்டி மற்றும் ரூ. 9 ஆயிரம் பணம் இருந்துள்ளது. இது குறித்து சரண்யா மதுரை ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். அதைத் தொடா்ந்து, மதுரை
ரயில்வே போலீஸாா், விருதுநகா் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன் அடிப்படையில் விருதுநகா் ரயில் நிலையத்திற்கு வந்த அந்தியோதயா ரயிலில், ரயில்வே போலீஸாா் சோதனை நடத்தி, அந்த பையை மீட்டனா். பின்னா் நகை, பணம் அடங்கிய அந்த பையை சரண்யா குடும்பத்தினரிடம் விருதுநகா் ரயில்வே காவல் ஆய்வாளா் குருசாமி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.